பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் காட்டம்பட்டியைச் சேர்ந்த காளீஸ்வரன் (43). இவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு பல்லடம் பிரதான சாலையையொட்டி அமைந்துள்ளது.
இவ்வழியாகப் பவர் கிரிட் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா சார்பில், தாராபுரம் முதல் கேரளா மாநிலம் திருச்சூர்வரை செல்லும் உயர்மின் கோபுரம் மூலம் கம்பி அமைத்து டவர் லைன் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன.
அதில், காளீஸ்வரன் தென்னந்தோப்பில் பல்லடம் பிரதான சாலையைக் கடந்து டவர் லைன் கம்பி இழுக்கும் பணிக்காக, ஆள்கள் மே 10ஆம்தேதி காலை 10 மணிக்கு வந்தபோது, விவசாயி பயிர் இழப்பீட்டுத் தொகை அதிகமாக வழங்கிய பின் பணியைத் தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கிணத்துக்கடவு வட்டாட்சியர் ஸ்ரீதேவி நேரில் சென்று விவசாயியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது , இரண்டரை ஆண்டு வளர்ந்துள்ள தென்னை மரத்திற்குண்டான இழப்பீட்டுத் தொகை குறைவாக உள்ளது. 10 ஆண்டுக் காலம் வளர்ந்துள்ள தென்னை மரத்திற்குண்டான இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயி தெரிவித்தார்.
அதற்கு, அரசு நிர்ணயம் செய்த இழப்பீட்டுத் தொகைதான் வழங்க முடியும் என்று வட்டாட்சியர் தெரிவித்தார்.
இதில் சமாதானம் அடையாத விவசாயியிடம், பொள்ளாச்சி துணை ஆட்சியர் வைத்தியநாதன் செல்போனில் பேச கிணத்துக்கடவு வட்டாட்சியர் ஏற்பாடு செய்து கொடுத்தார். துணை ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து விவசாயி சமாதானம் அடைந்தவுடன் கம்மி இழுக்கும் பணிகள் தாமதமாகத் தொடங்கின.
இதையும் படிங்க : ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழுக்களின் பணிகள் என்ன?