கோவை மாவட்டம், வால்பாறையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 4)இரவு முதல் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால், வால்பாறை மத்திய பகுதியான புதிய மார்க்கெட் பகுதியில் காய்கறி வியாபாரி ஆறுமுகம் என்பவரின் வீட்டின் மேல் ராட்சத மரம் விழுந்தது.
இதனால் அவ்வீட்டின் பின்பக்க அறை, சமையலறை முற்றிலும் சேதமடைந்தது. வீட்டின் முன்பக்க அறையில் குடும்பத்தினர் உறங்கிக்கொண்டிருந்ததால் அவர்கள் உயிர்தப்பினர்.
இதேபோல் சூறைக்காற்றின் வேகத்தில் காமராஜ் நகரில், இந்திரா என்பவரின் வீட்டின் பின்பக்க கூறை தூக்கி வீசப்பட்டது. இதில் வீட்டின் பின்பக்கம் சேமதமடைந்தது.
தொடர் மழை காரணமாக அண்ணா நகர் பகுதியில் நடராஜ் என்பவரின் வீட்டின் பின்பக்க பகுதியில் நகராட்சி பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்ததில், அவரது வீடு சேதமடைந்தது.
மேலும் தேயிலை தோட்டப்பகுதிகளில் ஏராளமான மரங்கள் சூறைக்காற்றில் விழுந்துள்ளன. இதனால் பல தேயிலை தோட்டங்களின் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லவில்லை. இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் பாதிப்படைந்துள்ளது. சம்பவ இடங்களை வால்பாறை வட்டாட்சியர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: கோவையில் பலத்த மழை: வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதம்!