பொள்ளாச்சி அருகே உள்ள பெரியபோது கிராமத்தைச் சேர்ந்தவர், செல்வராஜ் மகன் கோகுலகிருஷ்ணன்(6). இவர் விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக ஐந்து ரூபாய் நாணயத்தை தவறுதலாக விழுங்கிவிட்டார். வயிற்று வலி ஏற்பட்டதாக பெற்றோரிடம் சிறுவன் கூறியுள்ளார்.
இதையடுத்து அவரது தந்தை அருகிலுள்ள பெரியபோது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சிகிச்சை அளிக்காமல் மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறி உள்ளார்கள்.
உடனடியாக அந்த சிறுவனை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து வந்துள்ளனர். ஆனால், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையிலும் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்காமல், சுமார் இரண்டு மணி நேரம் வரை அலைக்கழிக்கப்பட்டு, அதன்பிறகு 'தண்ணீர் அருந்துங்கள் சரியாகிவிடும்' எனக் கூறி, அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு உள்ள சமூக ஆர்வலர்கள் சிலர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதனைத் தொடர்பு கொண்டு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை கூட அளிக்கவில்லை எனத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சார் ஆட்சியர் வைத்தியநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளரைத் தொடர்புகொண்டு சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டுமென உத்தரவிட்டதை அடுத்து, சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.