கோவை மாவட்டம் அன்னூரில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , "ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. கோவா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க வெளிப்படையாக வேலைகள் நடைபெற்றன. அதேபோல் தற்போது ராஜஸ்தானில் நடைபெற்றுவருகிறது.
பாஜக தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் எதிர்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தொந்தரவு செய்வது வாடிக்கையானது. அவர்களின் சித்தாந்தத்தை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் பகுத்தறிவு, திராவிடம் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கு உடந்தையாக அவர்களுக்கு அதிமுக அரசு உள்ளது. கந்த சஷ்டி கவசம் குறித்த விமர்சனம் கண்டிக்கத்தக்கது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை பாஜக அரசு வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டாம் எனக்கூறி இதுபோன்று வரைவு அறிக்கை வெளியிடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது சட்டமாக மாற்றப்பட்டால் பெரிய அளவில் போராட்டம் தமிழ்நாட்டில் நடைபெறும்" என்றார்.
இதையும் படிங்க: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை நாட்டின் சுற்றுச்சூழலுக்கு விரோதமானது' - கார்த்தி சிதம்பரம் எம்.பி.