நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று (நவ.07) தனது 66ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் முன்பு காலை முதல் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் குவிந்தனர்.
திறந்த வேனில் வந்த கமல்ஹாசன், தனது ரசிகர்கள், தொண்டர்களைச் சந்தித்தார். தொண்டர்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்று, புத்தகங்கள், மரக்கன்றுகளை பரிசாக அளித்தனர்.
கமலின் பிறந்தநாளுக்கு திரைப்பிரபலங்களும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தொடர்ந்து தெரிவித்துவருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட செயலாளர் மயூரா சுப்பிரமணியம் முன்னிலையில், கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் நகரின் 66 முக்கியபகுதியான சின்னம்பாளையம், கோட்டூர் ரோடு, கோவை ரோடு, தில்லைநகர், வடக்கிபாளையம் உள்ளிட்ட இடங்களில் கட்சி கொடியேற்றி 66 மரகன்றுகளை நட்டுவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதில் மாவட்டச் செயலாளர் மயூரா சுப்பிரமணியன், நகரச் செயலாளர் சசிகலா சண்முகசுந்தரம், முஹம்மது, கோபிநாத், தகவல் தொழில்நுட்ப பிரிவுமாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், என பலர் கலந்துகொண்டனர்.