கோவை மாவட்டம், மூரண்டம்மன் கோயில் வீதியில் ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வேணுகோபால் தலைமையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை அமைக்கப்பட்டது, அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. காலபைரவர், ஆஞ்சநேயர் ஆகிய சிலைகளோடு ஜெயலலிதா சிலையும் உள்ளது. அச்சிலையில் ஜெயலலிதா உருவம், வேல், மணி, இரட்டை இலை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இது குறித்து வேணுகோபால் கூறுகையில், "அதிமுக ஆட்சிக் காலத்தில் கணேசபுரம் பகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. அதற்கு நன்றிக் கடனை செலுத்தும் வகையில் கோயிலில் சிலை அமைத்து வழிபாடு செய்து வருகிறோம். 8 டன் கொண்ட ஒரே கல்லில் ஜெயலலிதா சிலை, ஆஞ்சநேயர் சிலை, 12 ராசிகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ரூ.5 லட்சம் செலவில் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெறும் போது, ஜெயலலிதா சிலைக்கும் சேர்த்து பூஜைகள் நடத்தப்படுகிறது. இக்கோயிலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். அதிமுகவினர் ஜெயலலிதாவை கடவுளாக நினைத்து வழிபாடு செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.