தமிழ்நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் மளிகை மெடிக்கல், காய்கறி வாங்க வெளியே செல்ல அனுமதி பெற வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில் அனுமதி பெறுவதற்கென புதிய செயலி ஒன்றை பொள்ளாச்சி வருவாய் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வருவாய் துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய செயலியானது, பொதுமக்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண்ணிலிருந்து 9488036600 என்ற எண்ணுக்கு நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்பதை குறுஞ்செய்தி ஒன்றை அனுப்ப வேண்டும். பின் ஆன்ட்ராய்ட் மொபைல் இல்லாதவர்களுக்கு OTP எண்ணும், மற்றவர்களுக்கு QR கோடு ஒன்றும் வரும்.
இந்த QR கோடு அல்லது OTPயை வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரத்திற்குள் பொள்ளாச்சி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட மருந்து கடை, மளிகை கடை, காய்கறி கடை ஆகிய இடங்களுக்கு சென்று வரவேண்டும். அப்படி நீங்கள் செல்லும் போது காவல்துறை தடுத்து நிறுத்தும் பட்சத்தில் QR கோடு அல்லது OTP யை காட்டினால், காவல் துறை அதை ஸ்கேன் செய்து அனுமதி விவரங்களை சரிபார்த்த பின் அனுப்புவார்கள். மேலும் இந்த புதிய செயலியானது தொலைபேசியின் ஒரு எண்ணுக்கு வாரம் ஒருமுறை மட்டுமே அனுமதிக்கப்படும்.
முடிவில், முதல்கட்டமாக பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காகவே, இது ஒரு புதிய முயற்சி. இந்த முயற்சி வெற்றி பெற்றால் பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமப் பகுதி முழுவதும் விரிவுப்படுத்தப்படும்” என்றார்.