நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் புலிகள் ஆசியாவில் இருந்தன. ஆனால் தற்போது புலிகளின் எண்ணிக்கை 4,000-க்கும் குறைவாகவே உள்ளது. 2022-க்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க பல்வேறு நாடுகளும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
சைபீரியன் புலிகள், வங்காளப் புலிகள், இந்தோ சீனப் புலிகள், மலாயன் புலிகள் மற்றும் தென் சீனப் புலிகள் என ஐந்து வகையான புலிகள் உள்ளன.
வங்காள புலி முதன்மையாக இந்தியாவில் காணப்படுகிறது. அவற்றில் சிறிய எண்ணிக்கை வங்காளதேசம், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளில் உள்ளது. உலகம் முழுவதும் புலிகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றன. புலிகளை அழிவுக்கு அருகில் கொண்டு செல்ல பல அச்சுறுத்தல்கள் உள்ளன. இந்த சூழலில் அவற்றை நாம் அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
புலிகள் எதிர்கொள்ளும் சில அச்சுறுத்தல்களில் வேட்டையாடுதல், மனிதர்களுடனான மோதல் மற்றும் வாழ்விட இழப்பு ஆகியவை அடங்கும். தற்போது வங்காளதேசம், பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், ரஷ்யா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய 13 நாடுகளில் மட்டுமே புலிகள் உள்ளன. அவற்றை சுற்றுச்சூழல் சமநிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
புலிகள் தாவர உண்ணிகளாக இருக்கும் விலங்குகளை இரையாக உட்கொள்கின்றன. இதன்மூலம் தாவரங்களை உண்ணும் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் இடையில் சமநிலையை புலிகள் பராமரிக்கின்றன. இது உணவுச் சங்கிலியில் ஒரு முக்கிய அம்சமாகும். ஒரு காட்டுப் புலியின் சராசரி ஆயுட்காலம் 10-15 ஆண்டுகள் ஆகும். சில சமயங்களில் 20 வயது வரை கூட வாழும், 2010ஆம் ஆண்டு செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் நடந்த புலிகள் உச்சி மாநாட்டில் முதன்முதலில் பாதுகாப்பு அம்சங்கள் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம் நடத்தப்பட வேண்டும்.
காட்டுப் புலிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அழிவின் விளிம்பில் இருந்து அவற்றை காப்பாற்ற மக்களிடம் ஊக்குவிப்பதற்கும் இந்த தினத்தினை அனுசரிக்க உத்தேசிக்கப்பட்டது.
புலிகள் பாதுகாப்பு குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், புலிகள் உலகின் மிகச் சிறந்த உயிரினங்களில் ஒன்றாகும். புலிகளை நாம் ‘குடை இனங்கள்’ என்று அழைக்கிறோம். ஏனென்றால் புலிகளின் பாதுகாப்பு அதே பகுதியில் உள்ள பல உயிரினங்களையும் பாதுகாக்கிறது. இந்தியாவின் தேசிய விலங்கினைப் பாதுகாக்கும் முயற்சியில், புலிகள் திட்டம் 1973-இல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட முயற்சிகள் காரணமாக, தற்போது இந்தியா உலகில் அதிக எண்ணிக்கையிலான புலிகளைக் கொண்டிருக்கிறது.
2006ஆம் ஆண்டில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மத்திய அரசால் தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து காட்டில் வாழும் புலிகளின் எண்ணிக்கை சுமார் 95% குறைந்துள்ளது. இப்போது சுமார் 4000-க்கும் கீழ்தான் காட்டுப் புலிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு புலிக்கும் ஒரு தனித்துவமான கோடுகள் உள்ளன (நம் கைரேகை போன்றவை). இது காடுகளில் உள்ள புலிகளை அடையாளம் காண உதவுகிறது.
புலி அழிந்துவரும் ஒரு உயிர் என அதிகாரப்பூர்வமாக ஐ.யூ.சி.என்-ஆல் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை காட்டுப் புலிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. இந்த புதிய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான போக்கு பின்வருமாறு
2006ஆம் ஆண்டு - 1411
2010ஆம் ஆண்டு - 1706
2014ஆம் ஆண்டு - 2226
2018ஆம் ஆண்டு - 2967
தற்போது பூமியில் வசிக்கும் மொத்த புலிகளில் 75% இந்தியாவில் வாழ்கிறது. புலிகளின் இயற்கையான வாழ்விடங்களை பாதுகாப்பதற்கான உலகளாவிய அமைப்பை ஊக்குவிப்பதும், புலிகள் பாதுகாப்பு பிரச்னைகள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் புலிகள் தினத்தின் குறிக்கோள் ஆகும் என்றார்.
இதுகுறித்து ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன் கூறுகையில், கோவை வனக் கோட்டம் புலிகள் காப்பகமாக இல்லாவிட்டாலும் புலிகள் வாழ்வதற்கான மிகப்பெரிய சூழல் உள்ளது. ஏனென்றால், கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை எப்படி இருக்கிறது என பார்க்கும்போது, 2008ஆம் ஆண்டு முதுமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் முதுமலைக்கு அருகிலுள்ள சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்ததால், 2014 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. அங்கு கணிசமான அளவில் புலிகள் தற்போது உள்ளது. சத்தியமங்கலத்தை ஒட்டி கோயம்புத்தூர் வனக்கோட்டம் உள்ளதால், சத்தியமங்கலத்தில் அதிகமாகும் புலி குட்டிகள் அருகில் உள்ள கோவை வனக்கோட்டத்திற்கு வந்தாக வேண்டும். அந்த வகையில் சிறுமுகை, மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், புலிகள் காப்பகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள ஆதரவு இந்த மாதிரியான வனக்கோட்டங்களுக்கு கொடுக்கப்படவில்லை.
இந்தியாவில் புலிகள் அதிகரிக்க வேண்டுமானால் புலிகள் காப்பகங்களுக்கு வழங்கக்கூடிய பாதுகாப்பு, நிதி உதவி போன்றவை புலிகள் எண்ணிக்கை அதிகரித்துவரும் வனக்கோட்டங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். கோவை வனக்கோட்டம் பாதுகாப்புக்குட்பட்டதாக இல்லை. புலிகள் காப்பகத்திற்கு ஒதுக்கப்படும் நிதி, கோவை வனக்கோட்டத்திற்கு கொடுக்கப்படவில்லை.
கோவை வனக்கோட்டத்திற்கு அவ்வாறு நிதி ஒதுக்கப்பட்டு, முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புள்ளது. புலிகள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற நம் நோக்கத்தை எட்ட இது உறுதுணையாக இருக்கும். புலிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும், கோவை வனக்கோட்டத்திற்கு கூடுதலான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: இன்று சர்வதேச புலிகள் தினம்: வன விலங்குகளை காப்பதற்கான முயற்சிகள் எடுப்போம்!