கோயம்புத்தூர்: கோவை அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமி பயிற்சி விளையாட்டு மையத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் அம்பத்தி ராயுடு பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களையும் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என்னுடைய இடத்தை பூர்த்தி செய்வதற்குச் சென்னை அணியில் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். ஏலத்திலும் சிறந்த வீரர்களை அணி நிர்வாகம் தேர்ந்து எடுக்கும்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியும் மற்றும் தற்போது விளையாடி வரும் அணிகளும் இணைந்து ஒரே அணியாக உருவெடுக்கும். அப்போது வருங்காலத்தில் ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியும் என நம்புகிறேன். மேலும் ருதுராஜ் சிஎஸ்கே-வை எதிர்காலத்தில் வழிநடத்தத் தகுதியுடையவர் என நான் நம்புகிறேன். இருப்பினும் மகேந்திர சிங் தோனி நல்ல முடிவெடுப்பார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒன்றரை மாதங்கள் சிறப்பாக விளையாடினோம். விளையாட்டில் ஒரு மோசமான நாள் என்பது அமைவது இயல்பு. நம் அணி வீரர்களைக் குறை சொல்ல ஒன்றும் இல்லை. அன்றைய தினம் ஆடுகளம் அவர்களுக்கு கை கொடுத்தது. இருப்பினும் எந்தவிதமான ஆடுகளத்திலும் நம்மால் சிறந்து விளங்க முடியும்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டி அன்று ஆடுகளம் Slow Wicket ஆக மாறியது. அதனை ஒரு காரணமாகக் கூறி விட்டுத் தப்ப முடியாது. கிரிக்கெட்டில் இது போன்று நடப்பது இயல்புதான். பென்ஸ்டோக்ஸ் சென்னை அணியில் இல்லை. நான் ஓய்வு பெற்று விட்டேன். அந்த இடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. அதை அணி நிர்வாகம் கருத்தில் கொண்டு பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 89 வருடத்திற்கு பின் முதல்முறை! சாதனை படைத்த சாய் சுதர்சன்! யார் இவர்?