பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் அதனால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கவில்லை. இதன் பாதிப்பு இப்போதும், ஏழை மக்களை ஏதேனும் ஒரு வழியில் தாக்கிக்கொண்டுதான் இருக்கின்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் பூமலூர் கிராமத்தைச் சேர்ந்த ரங்கம்மாள், தங்கம்மாள் என்ற சகோதரிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தெரியாமல் சேர்த்து வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுகளை மருத்துவ சிகிச்சைக்குக்கூட பயன்படுத்த முடியாமல் தவித்தனர்.
இதில் ரங்கம்மாள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார் அவர்கள் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த அந்தத் தொகை, மதிப்பு இல்லாமல் போனது. தற்போது இதேபோல் கோவையிலும் ஒரு சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. கோவையை அடுத்த கொண்டயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 92 வயதான கமலம்மாள் இவரது கணவர் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இரண்டு மகள்கள், மகனின் பராமரிப்பில் இருந்து வருகின்றார்.
கமலம்மாள் பணத்தை பீரோவில் வைத்து சிறுக சிறுக சேமித்து ரூபாய் 33 ஆயிரம் ரூபாய் சேமித்து வைத்துள்ளார். அதில் 51 பழைய 500 ரூபாய் நோட்டுகளும் 6 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் அடங்கும். வயதாகிவிட்டதால் கேட்கும் திறனையும் மூதாட்டி இழந்த நிலையில் வீட்டில் பணத்தைச் சேர்த்து வைத்ததை மறந்துபோய் உள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது மகன், மகள் ஆகியோர் கேட்டபோது தன்னிடம் பணம் இல்லை என்று சொன்னதால் அவரது குடும்பத்தினரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் சமீபத்தில் மூதாட்டி கமலம்மாளின் பீரோவை சுத்தப்படுத்தியபோது அதில் ஒரு புடவைக்கு கீழ் பழைய பணங்கள் இருப்பது தெரியவந்தது.
இந்த பணத்தை மாற்ற முடியாமல் கமலா அம்மாளின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். மூதாட்டி தனது இறுதி காலத்தில் உதவும் என சிறுக சிறுக சேமித்த அந்த பணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இப்போது யாருக்கும் உதவாமல் போனது குறித்து அவரது மகன் கோபால் கூறுகையில், "என்னுடைய அம்மா சேமித்து வைத்த பணம் யாருக்கும் தெரியவில்லை. 500 ரூபாய், 1000 ரூபாய், 100 ரூபாய், இரண்டு ரூபாய், 10 பைசா, 20 பைசா என பழைய காசுகளையும் சேமித்து வைத்துள்ளதார். அரசு ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்து இந்த பணத்திற்கு பதிலாக தங்களுக்கு மாற்று பணம் கிடைக்க வழி செய்ய வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படியுங்க: ஓட்டுக்கு பணம் எச்சரிக்கும் சுவரொட்டி: பட்டையை கிளப்பிய இளைஞர்கள்!