கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுக ஆட்சியில் கோவை என்றும் காணாத வளர்ச்சியை அடைந்துள்ளது. கோவையில் புதிய சாலைகளை அமைத்துள்ளதோடு, முக்கியச் சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன.
ஆறு புதிய அரசுக் கல்லூரிகளை அமைத்துள்ளோம். அத்திக்கடவு - அவிநாசி திட்டம், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கோவை அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டுள்ளது. 2011-க்குப் பிறகு கோவையில் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு இல்லை. பெண்களுக்குப் பாதுகாப்பு உள்ளது.
வாக்களித்த மக்களுக்கு நன்றி உணர்வுடனும், மனசாட்சியுடனும் பணியாற்றியுள்ளோம். மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வர அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். கருத்துக்கணிப்புகள் எல்லாம் கருத்துத் திணிப்புகள். எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமென்பதே கள நிலவரம்.
திமுக முக்கிய நிர்வாகிகளிடம் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. திமுகவினர் கள்ள ஒட்டு போட வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்துவருகின்றனர். அதிமுக அப்படி ஒருபோதும் செய்யாது" எனத் தெரிவித்தார்.