கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்துள்ள ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் உள்ள சென்னியப்பா பிள்ளை என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வருபவர் காளிமுத்து (65). இவரது மனைவி ராஜேஸ்வரி (60). கூலித் தொழிலாளியான கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் கோவையில் கணவருடன் வசித்து வரும் ராஜேஸ்வரி கணவரைப் பிரிந்து அவரது மகள் கவிதாமணி என்பவர் வீட்டிற்குச் சென்று உள்ளார். அவரது மகள் வீட்டில் ஒன்பது மாதங்களாக இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, ராஜேஸ்வரி அருகே உள்ள சுகுணா என்ற தனியார் பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்து வந்து உள்ளார். இந்நிலையில் நேற்று கணவர் காளிமுத்து தனது மகளின் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் மனைவியிடம் சமாதானம் பேசி சேர்ந்து வாழலாம் எனக் கூறி பொள்ளாச்சி பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: விளையாட்டு பொம்மைகளில் மறைத்து தங்கம் கடத்தல்: திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய குருவிகள்!
ஆனால் மீண்டும் நேற்று இரவு 9 மணிக்கு மேல் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் மனைவி ராஜேஸ்வரியைத் தாக்கிவிட்டு தலையணையை முகத்தில் வைத்து கொலை செய்துவிட்டு, பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்துக் காவல் துறையினருக்குப் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உடல்களைக் கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த முதற்கட்ட விசாரணையில் காளிமுத்து அடிக்கடி லாட்டரி சீட்டுகள் அதிகமாக வாங்குவதை வழக்கமாகக் கொண்டு இருந்துள்ளார்.
இதனால் அதிக கடன் ஏற்பட்டு உள்ளதாகவும், அதனால் தான் கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம், தகராறு ஏற்பட்டு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சந்தேகத்திற்கு இணங்க பல்வேறு தடயங்களைக் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், மேற்கு காவல் நிலைய போலீசார் காளிமுத்து மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் உறவினர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குடும்பத்தோடு கொலை செய்து தற்கொலை... சேலத்தில் 4 உயிர்கள் பலியான பதிதாபம்..