தமிழ்நாடு வனப்பகுதியில் உள்ள வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு உரிய சம்பளம் வழங்காதது, ஆனைமலை வனச்சரகத்தில் பணிபுரியும் வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு கடந்த மூன்று மாதமாக சம்பளம் வழங்காதது ஆகியவற்றை கண்டித்து ஆனைமலை வனச்சரக அலுவலகம் முன்பாக வேட்டைத் தடுப்புக் காவலர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலுவை சம்பளத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், பணி நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து வேட்டைத் தடுப்பு காவலர்கள் கூறுகையில், "மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்லை. இந்த விவகாரத்தில் வனத்துறை உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், வனவிலங்கு மோதல், வேட்டை ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும், குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் நுழைவதால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுப்பதிலும் சுணக்கம் ஏற்பட்டது. அதனால், விரைந்து முடிவெடுக்க வேண்டும்" என்றனர்.