கோயம்புத்தூரில் திடீரென இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
குறிப்பாக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய பிணவறை பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. அங்கு வழக்கமாக நிறுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் அமரர் ஊர்திகளை நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. பிணவறை அருகில் ஊர்திகளும் கொண்டு செல்ல முடியாத நிலையால், முழங்கால் அளவு மழை தண்ணீரில் சடலங்களை எடுத்து செல்ல வேண்டிய சூழல் நிலவியது.
அதேபோன்று மருத்துவமனையின் மற்ற பகுதிகளிலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால் நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகினர். தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும், அரசு மருத்துவமனை ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
அடிக்கடி பெய்யும் மழையால் அரசு மருத்துவமனை வளாகத்தில் நீர் தேங்கி நிற்பது வழக்கமாக உள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: விழாகாலத்தில் நீட்டிக்கப்பட்ட சிறப்பு ரயிகளின் அட்டவணை