கோவை மாவட்டம் முழுவதும் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதேபோல் வால்பாறை பகுதிகளிலும் நீடித்துவரும் மழைக்காரணமாக அங்குள்ள கூளாங்கல் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றிலிருந்து வெளியேறிய வெள்ளநீர் அரசு பேருந்து நிலையம், பணிமனை ஆகிய இடங்களில் புகுந்ததால், வால்பாறை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேருந்து இயக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
மேலும் வெள்ளம் காரணமாக ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுக்காடு, டோபி காலணி, வாழைத்தோட்டம் உள்ளிட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் அரசு கலைக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு, கம்பளி உள்ளிட்ட பொருட்களும் தரப்பட்டுள்ளது.
மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியரின் உத்திரவின் பேரில் அரசு மருத்துவர்கள், வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, காவல் துறை, வனத்துறையினர், நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களும் பாதிக்கப்பட்ட இடங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர் என வருவாய் கோட்டாச்சியர் ரவிக்குமார் தெரிவித்தார்.