கோயம்புத்தூர்: புலியகுளம் கிட்னி சென்டர் அருகே உள்ள கிரீன் பீல்ட் காலனியில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி (வயது 63). இவருக்கு கடந்த மார்ச் 21ஆம் தேதி, நாட்டுக்கோழி குழம்பில் மயக்க மருந்து கொடுத்து, அவரது வீட்டில் வர்ஷினி, அவரது நண்பர் அருண்குமார் மற்றும் ஓட்டுநர் நவீன் குமார் ஆகியோர் தங்கம், வைரம் உள்ளிட்ட சுமார் 100 பவுன் நகைகள் மற்றும் ரூபாய் இரண்டரை கோடி அளவிலான பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த குற்றத்தில், மேலும் தொடர்புடைய கார்த்திக் மற்றும் சுரேந்தரை மார்ச் மாதம் 24ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து சம்பவத்திற்கு பயன்படுத்திய KA 09 MA 6594 என்ற பதிவு எண் கொண்ட HONDA BRIO சிவப்பு கலர் காரும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர், குற்றச்செயலில் ஈடுபட்ட அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், அருண்குமாரிடம் இருந்து சுமார் 3 கோடி ரூபாய் பணத்தை சேலம் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான வர்ஷினி மற்றும் நவீன்குமார் ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் அவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த தீவிர தேடுதலின் முடிவாக கோவை தனிப்படை போலீசார் நேற்று (ஜூன் 10) வர்ஷினி, நவீன்குமார் ஆகியோரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, கைது செய்த வர்ஷினியிடம் சுமார் 70 சவரன் தங்க வைர வளையல்கள் மற்றும் ரூபாய் 35 லட்சம் பணம் TN 37 DH 8000 என்ற எண்ணுடன் கூடிய கார் மற்றும் விலையுர்ந்த I- Phone ஒன்றையும், நவீன்குமாரிடம் இருந்து ரூபாய் 5 லட்சம் பணம் மற்றும் TN 37 DH 5637 காரும் கைப்பற்றப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இவ்வழக்கில் மொத்தம் தங்கம், வைரம் உள்ளிட்ட 100 சவரன் நகைகள் மற்றும் ரூபாய் 48 இலட்சம் பணம் மற்றும் I-Phone ஒன்று ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் ரூ.3,12,0500 பணம், சேலம் வருமான வரித்துறை அலுவலகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பொள்ளாச்சி கிழக்கு தாராபுரம் காவல் நிலையம், சிங்காநல்லூர் மற்றும் கோவை மாநகர குற்ற பிரிவிலும் வர்ஷினிக்கு வழக்குகள் நிலுவையில் உள்ளது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணமாகாத பெண்களுக்கு குறி.. சோஷியல் மீடியா ரோமியோ சிக்கியது எப்படி?