கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நாக்கன்பாளையம் அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களோடு இணைந்து வளர்த்த வாழை மரங்கள் தற்போது தோப்பாக மாறியுள்ளன. இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை 150 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் எட்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் வளர்ப்பு உள்ளிட்ட பணிகள் இப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் மாணவர்கள் 110 வாழைக் கன்றுகளை நடவு செய்து பராமரித்து வந்தனர். இவற்றுக்கு சொட்டு நீர் குழாய்கள் அமைத்து தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது ஊரடங்கு காலமாக இருந்தபோதிலும் சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து இந்த வாழைமரங்களைப் பராமரிக்கும் பணியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பராமரிப்புக்காக பள்ளிக்கு வரும் மாணவர்கள் தகுந்த இடைவெளியுடன், முகக் கவசங்கள் அணிந்து அரசு விதிமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர். இத்தகைய கூட்டு முயற்சிகளின் விளைவாக தற்போது இந்தப் பள்ளி வளாகம் பசுமையான சோலையாக போன்று காட்சி அளிக்கிறது. சுற்றுச்சூழல் மன்றத்துக்கு வழங்கப்பட்ட தொகையைக் கொண்டு வாழைக்கன்றுகள், தேக்கு, நாவல், வேம்பு, புங்கை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மாணவர்களின் ஆர்வம், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றால் ஏழு மாதங்களுக்கு முன் நடவு செய்யப்பட்ட வாழைக் கன்றுகள் தற்போது நன்றாக வளர்ந்து தோப்பாக காட்சியளிக்கின்றது. மேலும் இது தங்களுக்கு பெரும் மன நிறைவை அளிப்பதாகவும் ஆசிரியர்களும் மாணவர்களும் தெரிவிக்கின்றனர்.
தவிர, இந்த அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சூழல் மன்றத்திற்கு 50 மாணவர்கள், 50 மரக்கன்றுகள் திட்டத்தின்கீழ் ஐந்தாயிரம் ரூபாயில் பராமரிப்புக் கருவிகளும் வாங்கித் தரப்பட்டுள்ளன. மேலும் 50 மாணவர்களுக்கு தலா 100 ரூபாய் வீதம் மொத்தம் ஐந்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பரிசுத்தொகையும், சான்றிதழும் மாணவர்களிடையே மென்மேலும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உள்ளன.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் ரூ.33 கோடி மதிப்பில் நலத்திட்டம் வழங்கிய முதலமைச்சர்!