கரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக, பொதுப்போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், பயணிகளின் ரயில் போக்குவரத்தின்றி, கோவை ரயில்வே ஜங்ஷனாது வெறிச்சோடி காணப்படுகிறது. எப்போதும் பயணிகளின் நடமாட்டத்தால் பரபரப்புடனே இருக்கும் கோவை ரயில் ஜங்ஷன் ஆனது, தற்போது பயணிகளின்றி அமைதி காத்துக் கிடக்கிறது.
இதனால் நடைபெற்று வந்த சிறு, குறு தொழில்கள் அனைத்தும் தற்போது முடங்கியுள்ளது. குறிப்பாக ரயில் நிலையத்தில் தேநீர் கடை, உணவு விடுதி மற்றும் இருசக்கர வாகன நிறுத்தும் இடம் ஆகியவற்றுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தற்போது பெருமளவு இல்லாததால் அந்த தொழிலாளர்கள் எந்த ஒரு வருமானமும் இன்றி, தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் இந்துராஜ் கூறுகையில், ' ரயில்வே நிலையம் அருகில் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தி வந்த எனக்கு, இந்த கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி இருக்கிறேன். வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமலும் தவிக்கிறேன். குழந்தைகளின் கல்லூரி படிப்பிற்கும் கட்டணம் கட்ட முடியாத நிலையில் தள்ளப்படிருக்கிறேன்' என்றார் வேதனையாக
இதுகுறித்து ரயில் நிலையத்தில் வேலை செய்யும் சுமை தூக்கும் தொழிலாளி செந்தில் என்பவர் கூறுகையில், 'நான் இங்கு குறைந்தது 30 ஆண்டுகளாக வேலை பார்க்கிறேன். கரோனாவிற்கு முன்பு எங்களுடைய வாழ்வாதாரம் நல்ல நிலையில் இருந்தது. ஆனால், இந்த கரோனாவினால் தற்போது ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதினால் பயணிகளின் வருகையும் நின்றது. இத்தொழிலை நம்பியே இருக்கும் நாங்கள் இப்போது எந்த வேலையும் இல்லாததால் வருமானமின்றி மிகவும் சிரமப்படுகிறோம். எனவே, இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரமின்றி இருக்கும் எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் இது போல பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் உடனடியாக சிறு இழப்பீடு தர வேண்டும்' எனவும் கோரிக்கை வைத்தனர்.
மேலும் ஒரு சுமை தூக்கும் தொழிலாளி வெங்கடேஷ் என்பவர் கூறுகையில், 'இந்த கரோனாவால் குடும்பத்தை நடத்துவது ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. அரசாங்கம் ஏதாவது பார்த்து உதவி செய்தால் நன்றாக இருக்கும்' என்றார்.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு - பாதிப்படைந்த ரயில்வே பயணச்சீட்டு முகவர்களும் பயணிகளும்!