தமிழ்நாட்டின் தாளவாடி, உதகை ஆகிய பகுதிகளை கர்நாடகாவுடன் இணைக்க வலியுறுத்தி வாட்டாள் நாகராஜ் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்ததற்கு காந்திய மக்கள் இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அண்டை மாநில மக்களுடன் இருக்கும் சகோதர உணர்வை தொடர்ந்து அழிக்கும் செயலில் ஈடுபட்டு வரும் வாட்டாள் நாகராஜ் மீது கர்நாடக அரசு தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக, காந்திய மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்துடன் தாளவாடி, உதகையை இணைக்கக் கோரி இன்று உண்ணாவிரதம் இருக்க போவதாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மாநில எல்லைகளை சீரமைப்பு செய்த போது பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, இன்னும் அதிலிருந்து மீளவில்லை. அதற்கு பிறகு மற்ற மாநிலப் பகுதிகளுக்கு கர்நாடகமும், மகாராஷ்டிராவும் உரிமை கொண்டாடுவது போல் தமிழ்நாடு நடந்து கொள்ளவில்லை. இதை தமிழ்நாட்டில் பலவீனம் என்று வாட்டாள் நாகராஜ் போன்றவர்கள் நினைத்தார்கள் என்றால் அது கடைந்தெடுத்த கயமைத்தனம் ஆகும்.
இவரை போன்ற குறுக்குபுத்திகாரர்களை, வாக்கு அறுவடைக்காக கர்நாடக அரசியல்வாதிகள் கண்டு காணாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. அண்டை மாநில மக்களுடன் இருக்கும் சகோதர உணர்வை தொடர்ந்து அழிக்கும் செயலில் ஈடுபட்டு வரும் வாட்டாள் நாகராஜ் மீது கர்நாடக அரசு தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் அது தேசிய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளைவிக்க முயலுகிற தீய சக்திகளை ஊக்குவிப்பதாக அமையும்” என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: