கோவை மாவட்டம் கணபதி பகுதியில் கேய்டின்ஸ் வேலைவாய்ப்பு மையம் என்ற நிறுவனத்தை பிரின்ஸ் டேனியல், அவரது மனைவி கரிஷ்மா டேனியல் ஆகியோர் நடத்திவந்தனர்.
மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா நாடுகளில் அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு என விளம்பரப்படுத்தியதை அடுத்து அங்கு ஏராளமான மாணவர்கள் வேலைக்கு விண்ணப்பித்தனர்.
இரண்டு முதல் ஐந்து லட்சம் என கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.6 கோடி வரை பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த பணம் செலுத்தியவர்கள் பிரின்ஸ் டேனியலை அணுகி பணத்தைத் திருப்பிக் கேட்டதற்கு,
அவர், "வெளிநாடுகளில் வேலை கிடைக்க முன்பணமாக செலுத்திவிட்டேன். பணமெல்லாம் திருப்பிக் கொடுக்க முடியாது. நான் நீலகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இளைஞரணிச் செயலாளராக இருக்கிறேன்; எனக்கு அரசியல் பலம் இருக்கிறது" என பணம் கொடுத்தவர்களை மிரட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து காவல் துறையினரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், செலுத்திய பணத்தைத் திரும்பக் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிம் மனு அளித்துள்ளனர்.