சோதனைகளை அதிகப்படுத்தி தொற்றுள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதுதான் கரோனாவைக் கட்டுப்படுத்த ஒரே வழி என்று பல மருத்துவர்கள் தெரிவித்துவருகின்றனர்.
இதனைப் புரிந்துகொண்ட அரசு, கரோனா பரிசோதனைகளை அதிகம் செய்வதற்காக தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி அளித்தது. மேலும், இந்த சோதனைகளை மேற்கொள்வதற்கு அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை தனியார் ஆய்வகங்களுக்கு வழங்கவும் செய்கிறது.
இந்நிலையில், கோவையிலுள்ள 10க்கும் மேற்பட்ட ஆய்வகங்களில் நான்கு ஆய்வகங்கள் லாப நோக்கோடு பரிசோதனை எண்ணிக்கையை அதிகம் காட்டி அரசிடமிருந்து அதிக தொகையை வாங்கிவருவதாக சுகாதாரத் துறைக்கு சந்தேகம் எழுந்தது.
இதைத்தொடர்ந்து அந்த ஆய்வகங்களுக்கு சென்று சுகாதாரத் துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில், போலி அடையாள அட்டைகளை கணக்கு காட்டியும், ஒரே அட்டையை மூன்றுக்கும் மேற்பட்ட முறை பரிசோதனை செய்ததுபோல் காட்டியும் அரசிடமிருந்து நிதி வாங்கியது தெரியவந்தது. இதனால், சுகாதாரத் துறை அலுவலர்கள், கரோனா பரிசோதனை செய்ய அந்த தனியார் ஆய்வகங்களுக்கு தடை விதித்தனர்.
இதையும் படிங்க: கோவை மாவட்டம் கட்டுக்குள் உள்ளது - அமைச்சர் வேலுமணி