நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் திமுக தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற அனுசரிப்பு கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயிலில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராமசேயோன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
கோயம்புத்தூர்
இதேபோல் கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றிய திமுக சார்பில் நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள ஆதரவற்றோர் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு அன்னதானம், மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து அன்னூர் பேரூராட்சியில் திமுக கொடி ஏற்றப்பட்டு தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்களுக்கு கரோனா எதிர்ப்பு சக்திக்காக ஹோமியோபதி மருந்துகள், முகக் கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதில் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் நடராசன், அன்னூர் ஒன்றிய துணை பெருந்தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மதுரை
மதுரை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பிபிஇ (PPE) கிட்டுகளை வழங்கியும், தூய்மைப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புத்தாடைகள் வழங்கியும் திமுக தொண்டர்கள் கருணாநிதியின் நினைவு தினத்தை அனுசரித்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் தொகுதி திமுக எம்எல்ஏ விஜி ராஜேந்திரன் திமுக அலுவலகம் முன்பு கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து இறையமங்கலம், கொண்டன்சேரி, பேரம்பாக்கம், செஞ்சி ஆகிய ஊராட்சிகளுக்கு சென்று கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் பொதுமக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் 26 துளை கிணறுகள் அமைக்க மின் மோட்டார்கள், அதற்கான உபகரணங்களை விவசாயிகளுக்கு வழங்கினார். இதில் செஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் ரா. அறிவழகி ராஜி, துணைத் தலைவர் ஜவகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கருணாநிதி நினைவு தினம் - முன்னாள் அமைச்சர் மரியாதை!