கோயம்புத்தூர்: தமிழக கேரள எல்லையான ஆனைகட்டி பகுதியில் காட்டு யானை வாயில் காயத்துடன், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கடந்த இரு தினங்களாக தமிழக பகுதி மற்றும் கேரள பகுதி ஆகிய இரு பகுதிகளிலும் காட்டு யானையை தேடும் பணி நடைபெற்று வந்தது. தமிழக வனப்பகுதியில் 7 குழுக்களும் கேரள வனப்பகுதியில் நான்கு குழுக்களும் என மொத்தம் 11 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்று வந்தது. ட்ரோன் மூலமாகவும் தேடுதல் பணிகள் ஆனது நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று மாலை உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை கோவை தோலாம்பாளையம் வனப்பகுதியில் செங்குட்டை பழங்குடியின கிராமத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து கோவை மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் தலைமையில் வனத்துறை குழுவினர் அங்கு முகாமிட்டனர். யானை கண்டறியப்பட்ட தோலாம்பாளையம் வனப்பகுதியில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலும் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறுகையில், தோலாம்பாளையம் வனப்பகுதியில் மாலை 4.30 மணி அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை தென்பட்டது. அடர் வனப்பகுதிக்குள் இருக்கும் யானையை சமவெளி பகுதிக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கும்கி யானை உதவியுடன் சிகிச்சை அளிக்க 3 வனத்துறை மருத்துவக் குழு தயார் நிலையில் இருக்கின்றது.
யானை சுறுசுறுப்பாக இருக்கின்றது என்றாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அடர் வனத்திற்குள் இருந்து யானையை திசை திருப்பி சமதள பரப்பிற்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.
இதனிடையே மாலை நேரம் ஆகி விட்டதால் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியை தற்காலிகமாக கைவிட்ட வனத்துறையினர், யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கவனித்து வருகின்றனர். நாளை காலை யானையை கண்டறிந்து மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கல்வித்தொலைக்காட்சி விவகாரத்தில் அரசாங்கமும், நானும் ஏமாந்துவிடமாட்டோம்... டிரெண்டிங் குறித்து அன்பில் மகேஷ்