கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இந்த புலிகள் காப்பகம் சுமார் 958 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
இந்நிலையில், தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள உதவி கள இயக்குநர் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின்படி, வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்தில் பணியாற்றும் 23 வேட்டைத்தடுப்பு, வன உயிரின மோதல் தடுப்புக்குழுவினருக்கு எவ்வித சவால்களையும் சமாளிக்கும் விதமாக கமாண்டோ பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
கமாண்டோ சிறப்புப்பயிற்சி பெற்ற வனவர் முனியான்டி வனத்துறையினருக்கு சிறப்புப் பயிற்சி அளித்து வருகிறார். அதில், ஒழுக்கம், கட்டுப்பாடு, வன விலங்குகளிடமிருந்து பொது மக்களைக் காப்பது, கயிற்றில் ஏறுதல், தாண்டுதல், ஓடுதல் உட்பட அவசர காலத்தில் செயல்படும் முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டன.
தொடர்ந்து இப்பயிற்சி ஒரு மாத காலம் நடைபெறும் என்றும்; சிறந்த கமாண்டோ படையாக, இந்தப் படை உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தனர். வனத்துறையில் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக இப்படை வால்பாறையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பேரிடர் மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சி; 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!