கரோனாவின் மூன்றாவது அலை குறித்து தமிழ்நாட்டு மக்கள் அச்சத்தில் இருக்க கொங்கு மண்டலத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் எஸ்.பி. வேலுமணிக்கு வேறு அச்சம் தொற்றிக்கொண்டுள்ளது.
திமுக ஆட்சி அமைந்தவுடன் எஸ்.பி. வேலுமணி மீதுதான் முதல் குறி வைக்கப்படும் என அனைத்து திமுகவினரும் நினைத்திருந்தனர். யாரும் நினைக்காதவண்ணம் போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீடு, அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது.
வேலுமணி விவகாரத்தைப் பொறுத்தவரை, ஸ்டாலினேகூட தன்னுடைய தேர்தல் பரப்புரையின்போது, “நானே தலையிடுவேன்” என்று கூறியது வேலுமணி தரப்புக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
ஆனாலும், வேலுமணிக்கான ஸ்கெட்ச் எப்போது என்று திமுகவினர் பலர் முணுமுணுக்க ஆரம்பித்தனர்.
திமுகவினரின் அங்கலாய்ப்புக்கு முத்தாய்ப்பாக, திருவேங்கடம் என்பவர் வேலுமணி மீது ஒரு கோடி ரூபாய் மோசடி புகார் தெரிவித்தார். ஏற்கெனவே வேலுமணி மீது ஏகப்பட்ட புகார்கள் எழுந்திருந்த நிலையில், திருவேங்கடத்தின் புகாரை அடுத்து ரெய்டு அஸ்திரம் ஆரம்பமானது.
அதன்படி எஸ்.பி. வேலுமணியின் வீடு, அவருக்குத் தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை இன்று தொடங்கியது.
காலையில் தொடங்கிய சோதனையைத் தெரிந்துகொண்ட அதிமுகவினர் சோதனைக்கு எதிராக வேலுமணி வீட்டின் முன்பு குவிய தொடங்கி போராட்டம் நடத்தினர். இதனைக் கண்ட பலர் கொங்கு மண்டலத்தில் வேலுமணிக்கு இவ்வளவு செல்வாக்கா என்ற ஆச்சரியப்பட்டனர்.
அதேசமயம், போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு தலைக்கு 1000 ரூபாய் பணமும், காலை, மதியம் என இரண்டு வேளைகளும் உணவு வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அது தொடர்பான புகைப்படங்களும், காணொலிகளும் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் கொங்கு பகுதியை வேலுமணி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று உருவாகியிருக்கும் பிம்பம் அவரின் 'மணி'யால்தான் வந்ததுபோல என கலாய்த்துவருகின்றனர்.