தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், புத்தாடைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கோயம்புத்தூர் டவுன்ஹால் ஒப்பனக்கார வீதி, பெரிய கடை வீதியில் உள்ள கணபதி சில்க்ஸ் மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று (நவ.1) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்களிலும் மக்கள் கூட்டமாக வந்து சென்றனர்.
முன்னதாக பண்டிகை காலம் என்பதால் கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் அனைத்து வணிகர்களையும் அழைத்து தனிமனித இடைவெளி, முகக்கவசும் அணிவதை மக்களுக்கு வலியுறுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். இதனைத்தொடர்ந்து, கோவை நகராட்சி சார்பில் முக்கிய வீதிகளில் எமன் வேடம் அணிந்து நாடக கலைஞர்கள் கரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு செய்தனர்.
இந்நிலையில், நேற்று (நவ.1) மாலை டவுன்ஹால் ஒப்பனக்கார வீதி, பெரிய கடை வீதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காத காரணத்தினால், கணபதி சில்க்ஸ் நிறுவனத்திற்கு, 2 லட்ச ரூபாயும், சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும் அபாரதம் விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: வெங்காயத்தைப் போல பருப்பு எண்ணெய் விலைகளும் உயரும் - விக்கிரமராஜா