கோயம்புத்தூர்: கோவை, போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் இச்சிக்குழி பகுதியில், வனத்தை ஓட்டிய தனியார் நிலத்தில் பெண் யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், வாய்ப்பகுதியில் ரத்த காயங்களுடன் யானை இறந்து கிடப்பது தெரிய வந்துள்ளது. பின்னர், இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.
யானை வாயில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடக்கும் செய்தி கிராம மக்கள் மத்தியில் வேகமாய் பரவிய நிலையில், யானையைக் காண ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். யானை உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், நோய் தொற்று அபாயம் ஏற்படலாம் என பொதுமக்களை வனத்துறையினர் பார்க்க அனுமதிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, யானையின் உடலை வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். அதில் யானை கல்லீரல் நோய் பாதிப்பால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘உயிரிழந்த யானைக்கு சுமார் 15 வயது இருக்கலாம். யானைக்கு கல்லீரல் நோய் பாதிப்பு இருந்ததால்தான் உயிரிழந்தது என உடற்கூறாய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், அதற்கான காரணத்தைக் கண்டறிய வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்” என தெரிவித்தார். இதனையடுத்து யானையின் உடல் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது.
இதையும் படிங்க: இன்று முதல் பழனி கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை!