இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது. இதில், நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். முத்தையா முரளிதரன் சிங்களர்களுக்கு ஆதரவாக இருந்ததால், அவரது வாழ்க்கைப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என தமிழ் ஈழ அமைப்புகளும், வெளிநாட்டில் வாழும் தமிழர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறுகையில், "முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக வெளியான செய்தி வேதனையளிக்கிறது. முத்தையா முரளிதரன் தமிழராக இருந்தபோதிலும் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்களப் பேரினவாதத்தின் அதிபராக இருக்கும் ராஜபக்சேவிற்கு ஆதரவாக செயல்பட்டவர்.
தமிழனாக இருந்தும்கூட தனக்கு தமிழ் தெரியாது என்று பெருமையாகக் கூறிக் கொண்டு, சிங்களத்தில் உரையாடிக் கொண்டு சிங்கள மக்களுக்கு ஆதரவாக நின்றாரே தவிர, தமிழ் மக்களுக்காகவும் ஈழத் தமிழர்களுக்காகவும் நிற்கவில்லை. அப்படிப்பட்ட ஒருவருடைய வாழ்க்கைப் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.
சிங்கள பேரினவாதத்தின் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று ஈழத்தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், இதற்கு ஆதரவாக இருக்கக்கூடிய முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்தால், அந்தக் காட்சிகள் மூலம் சிங்களப் பேரினவாதி ராஜபக்சே மீது இருக்கக்கூடிய கோபத்தை அந்நிகழ்வு தணிக்கச் செய்யும். எனவே, விஜய் சேதுபதி அந்த கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடாது.
விஜய் சேதுபதி ஒரு நல்ல நடிகர். பெரியார் மீது பற்றுள்ளவர். முற்போக்காளர். மனிதநேயம் மிக்கவர். இந்த சிங்கள ஆதரவாளர்களை ஆதரிக்கும் வகையில் நடித்து நல்ல பெயரை கெடுத்து விடக்கூடாது. இப்படத்தில் அவர் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதையும் மீறி நடித்தால் இந்த திரைப்படம் வெளியாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நாங்கள் விடமாட்டோம்.
சினிமா என்பது ஒரு மிகவும் சக்திவாய்ந்த ஒரு சாதனம். கொடியவர்களை நல்லவர்களைப் போல் காட்டுகின்ற ஒரு சாதனம் அது. கலை என்பது மக்களுக்கு எதிராகப் போகுமானால், அந்தக் கலையை கொலையும் செய்யலாம் என்று பெரியார் கூறினார். அவ்வாறு ராஜபக்சேவை நல்லவர்களைப் போல் காட்டும் இந்த திரைப்படத்தை ஏற்றுக்கொள்ள இயலாது" என்று எச்சரித்தார்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த ராஜபக்சே மகன்