கோவை: ஆலந்துறை அடுத்த சாடிவயல் போளுவாம்பட்டி வனப்பகுதியில் கோவை குற்றால அருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த அருவிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
இதில் தீபாவளி வார விடுமுறை நாட்கள் பொங்கல் உள்ளிட்ட நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வருவது வழக்கம். போளுவாம்பட்டி வனச்சரகத்தில் அமைந்துள்ளதால் சூழல் சுற்றுலாவை மேம்படுத்த கோவை குற்றால அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.60, குழந்தைகளுக்கு ரூ.30, இருசக்கர வாகனம் நிறுத்த 20 ரூபாயும், கார்கள் நிறுத்த 50 ரூபாயும் கட்டணமாக வனத்துறை வசூலித்து வருகிறது.
இந்நிலையில் இந்த கட்டண வசூலில் பல லட்சம் ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. நுழைவு சீட்டுகள் வழங்கும் இடத்தில் இரண்டு மெஷின்களில் நுழைவு கட்டண சீட்டை அச்சிட்டு பணத்தை பெறுவதும்; இதில் ஒரு மிஷினில் பதிவு செய்யப்படும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கான தொகை மட்டுமே அரசுக்கு செல்லும் வகையில் பதிவு செய்யபட்டுள்ளது.
மற்றொரு மெஷினில் நுழைவு கட்டணம் போன்றே போலியான நுழைவு சீட்டை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி அதற்கான பணத்தை அதிகாரிகளே எடுத்துக்கொண்டது பண முறைகேடு செய்துள்ளது ஈடிவி பாரத் கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆறு மாத காலத்தில் பல லட்சம் ரூபாய் இதில் முறையீடு நடைபெற்றுள்ளதாகவும் இதற்கு முன்னர் இருந்த வனச்சரக அதிகாரியும் இதேபோன்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமாரிடம் கேட்டபோது, ’இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:திருமாவளவன் ட்வீட்டுக்கு கொந்தளித்த நடிகை வனிதா.. அப்படி என்ன விஷயம்?