கோயம்புத்தூரில் முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.சி. பழனிசாமி தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "கோயம்புத்தூரில் ஜெயலலிதாவின் சிலைக்கு நான் மாலை அணிவிப்பதைத் தடுப்பது எந்த விதத்தில் நியாயம். எனக்கு விதித்த தடையை தகர்த்து எறியும் வல்லமை எனக்குண்டு. கோவை நகரின் அமைதி கருதி எனது வீட்டிலேயே ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றோம். சேலம் மாவட்டத்திற்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக செயல்படுகிறார். இந்த ஆட்சியில் தென்மாவட்டங்கள் புறக்கணிக்கபடுகின்றன.
தமிழ்நாட்டில் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் உக்கிரமாக இருக்க காரணம், மாநிலங்களவையில் சிஏஏவிற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்ததுதான். எடப்பாடி பழனிசாமி, வேலுமணி ஆகியோரை கட்சியை விட்டு விலக்கினால் சிறுபான்மையினர் ஆதரவு மீண்டும் கிடைத்துவிடும். என்னை கட்சியை விட்டு நீக்கியதாக வாய்மொழியாகச் சொல்கின்றனர். நான் அதிமுக இல்லை என்றால் எனது வழக்கை நீதிமன்றம் எப்படி ஏற்கும்.
என்னை கட்சியை விட்டு நீக்கியதாகக் கூறப்படும் அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி காட்டினால் நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக அதிமுக செயல்படுகின்றது. அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் செயல்பாடுகள் கோவையில் அறிவிக்கப்படாத தீவிரவாத செயல்பாடுகளைப் போல் இருக்கிறது. அதிமுகவில் அதிகபட்ச ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் எஸ்.பி. வேலுமணி.
இந்த ஆட்சி முடிந்தவுடன் நிச்சயம் வேலுமணி சிறைக்குச் செல்வார். அலுவலர்களின் அதிகாரத்தை அமைச்சர்கள் கையில் வைத்துக்கொண்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்க தகுதியற்றவர். வேலுமணி சிறையில் இருக்க வேண்டியவர்" என்று கூறினார்.
இதையும் படிங்க: 'எனக்கு பள்ளிக்கூடம் போக, ஆசையா இருக்கு... ஆனா, படிக்க வசதியில்லை' - கலங்கிய மாணவிகள்