கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது போளுவாம்பட்டி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள், காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதில் யானை மற்றும் காட்டெருமை உணவு மற்றும் தண்ணீருக்காக அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறுவது வழக்கம்.
இந்நிலையில் செம்மேடு சப்பானிமடை பகுதியில், சுமார் எட்டு வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று வாயில் காயத்துடன் உணவு உட்கொள்ளாமல் சுற்றிவருவதை அப்பகுதி பழங்குடியின மக்கள் பார்த்து, போளுவம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர், போளுவாம்பட்டி வனத்துறையினருடன் வந்த மருத்துவ குழுவினர், சம்பவ இடத்துக்கு சென்ற நிலையில் திடீரென தரையில் படுத்த அந்த யானை அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதனையடுத்து மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்ததில் அந்த யானையின் தாடையில் மற்றொரு யானை தந்தத்தால் குத்தியதற்கான அடையாளம் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் தந்தத்தால் குத்தியதற்கான காயங்கள் காணப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், இரண்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்த யானைக்கு பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. யானையின் தாடைப் பகுதியில் மற்றொரு யானையின் தந்தம் குத்தியதால், தாடைப் பகுதி பாதிக்கப்பட்டும், அந்த மோதலில் யானையின் நாக்கும் துண்டாகியுள்ளது.
இதன் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக யானை உணவு உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டிருக்கிறது. அதன் காரணமாகவே தற்போது யானை உயிரிழந்துள்ளது” என்றார்.
இதையும் படிங்க:ஒருவரின் அலட்சியத்தால் ஊரே பீதி!