கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கோயம்புத்தூரும் இருக்கிறது. இதனால் அம்மாவட்டத்தில் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
அதிகரிக்கும் போதை மருந்து விற்பனைகள்
இதனால் அங்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் போதைக்காக கஞ்சா உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
மேலும் பிற மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் மதுபானங்களைக் கடத்திவந்து விற்பனைசெய்வதும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.
இதனைத் தடுக்கும்விதமாக கோயம்புத்தூர் சாய்பாபா காலனி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கோவில்மேடு தவசி நகர்ப்பகுதியில், காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுவந்தனர்.
போதைக்கு டைடல் விற்பனை
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் சாலையோரம் நின்றிருந்த வாகனத்தை, காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும் அதிலிருந்த நான்கு பேரிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.
இதில் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ஜானகி ராமன், டிவிஎஸ் நகரைச் சேர்ந்த பார்த்திபன், இடையர்பாளையத்தைச் சேர்ந்த கபிலேஷ், குனியமுத்தூரைச் சேர்ந்த முகமது அப்சல் ஆகிய நால்வரும் வலி நிவாரணி, மயக்கத்துக்காகப் பயன்படுத்தும் 'டைடல் டெபென்டல்' என்ற மாத்திரையைப் போதைக்காக விற்பனைசெய்தது தெரியவந்தது.
வலி நிவாரணி, மயக்க மருந்துக்குப் பயன்படுத்தும் இந்த மாத்திரையை கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தினால் போதையை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்பதும் இதனால் அவர்கள் விற்பனையில் ஈடுபடுவதும் தெரியவந்தது.
650 மாத்திரைகள் பறிமுதல்
இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் காவல் துறையினர் கைதுசெய்து, நீதிமன்றம் முன்னிறுத்தி சிறையிலடைத்தனர். பின் அவர்களிடமிருந்து ஒரு வாகனம், போதைக்காகப் பயன்படுத்திய 650 வலி நிவாரண மாத்திரை, ரூ.11500 ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனர்.
இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது நியூசிலாந்து!