கோவை அரசு மருத்துவமனை பின்புறம் உடற்கூறாய்வு பரிசோதனை கட்டடம் உள்ளது. அதன் அருகில் அரசுக் கலைக் கல்லூரியும் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், உடற்கூறாய்வு பரிசோதனை கட்டடம் அருகே இருக்கும் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் ஆறாக ஓடியுள்ளது. இதன் காரணமாக சாலை அரித்து, பள்ளமும் ஏற்பட்டது.
இதனால் அவ்வழியே நடந்துசெல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை உடனடியாகச் சரிசெய்யக்கோரி மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள், அப்பகுதி வணிக வியாபாரிகள் ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பின் அங்கு வந்த தூய்மைப் பணியாளர்கள் அதனைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
கோவை அரசு மருத்துவமனை அருகே அடிக்கடி இதுபோன்று குடிநீர் வீணாய் போவதாகவும், மழைக்காலத்தில் வெள்ளம் சூழ்ந்தால் அப்பகுதியில் நடக்கமுடியாத நிலை ஏற்படுவதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'இனி எல்லாம் நாங்க தான்'... மருத்துவர்களின் பாதுகாவலனான மித்ரா ரோபோ!