கோவை: 'கரம் கோர்ப்போம், சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் துணைத் தலைவர் மருத்துவர் மகேந்திரன் தலைமையில் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மடத்துக்குளம், பொள்ளாச்சி, கோவை, வால்பாறை, உடுமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் காணொலி மூலம் நிர்வாகிகளிடம் உரையாடினார்.
இந்நிகழ்ச்சியில், வால்பாறை நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த மலைவாழ் பெண் சர்ணாயவுக்கு, கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் கல்வி ஊக்கத் தொகையை வழங்கினார். இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மகேந்திரன், "சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளன. கரோனா ஊரடங்கு தளர்வு, தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி கூட்டம் நடைபெறுகிறது.
இதில், மண்டலச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். கிராமம் தோறும் சென்று பொதுமக்களை சந்தித்து மனுக்கள் பெறவுள்ளோம். மதச்சார்பற்ற கட்சி மக்கள் நீதி மய்யம் கட்சி. மதம் சார்ந்த அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கமாட்டார்கள்.
நடிகர் ரஜினி எனது 40 வருட நண்பர், அவர் அரசியலுக்கு வரவேண்டும் என கமல் ஹாசன் ஏற்கனவே கூறியிருந்தார். ரஜினி அரசியலுக்கு வருவதால் புதிய மாற்றம் உருவாகும். தமிழ்நாட்டில் மக்கள் நீதி மய்யத்தை வளர்ச்சியடையவிடாமல் தடுக்க பொதுமக்களிடம் திராவிட கட்சிகள் அவதூறுகளைப் பரப்பி வருகிறது. எங்கள் கட்சி வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது" என்றார்.
இதையும் படிங்க: நேர்மையாளர் சூரப்பா! - கமல் ஹாசன்