தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நீடிக்குமா அல்லது திமுகவின் கனவு மெய்யாகுமா என்பது இந்த இடைத்தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே இருக்கும் என்பதே கள யதார்த்தமாக இருக்கிறது.
நான்கு தொகுதிகளையும் கைப்பற்றியே ஆக வேண்டும் என ஸ்டாலின் கடும் வியூகங்களை வகுத்து செயல்பட்டுவருகிறார். அந்த வகையில், இன்று சூலூர் தொகுதி வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக நேற்றிரவு கோவை வந்தடைந்த ஸ்டாலின், லீ மெரிடியன் ஓட்டலில் தங்கியிருந்தார்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாகவே, அடுத்தநாள் காலை இருகூர் வாரச்சந்தையில் வியாபாரிகள், பொதுமக்களை நடை பயணமாக வந்து சந்திப்பது என்று தொகுதியின் பொறுப்பாளர் எ.வ.வேலு உள்ளிட்ட நிர்வாகிகளுடன் கலந்துபேசி அடுத்த நாள் பிளான் ஓகே ஆனதாகத் தெரிகிறது.
அதன்படி, காலை 8.10 மணியளவில், ஆரஞ்ச் கலர் டி-ஷர்ட் அணிந்து இருகூர் வாரச்சந்தை பகுதிக்கு ஸ்டாலின் வந்தடைந்தார்.
ஆனால், அவர் வருவதற்கு முன்பாகவே அங்கு கட்சித் தொண்டர்களும், ஸ்டாலினை பார்ப்பதற்காக பொதுமக்களும் பெரிய அளவில் கூடியிருந்தனர். ஸ்டாலினின் திட்டமோ, சந்தைக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகளை சந்தித்து வாக்கு சேகரிப்பது என்றிருக்க, அங்குள்ள சூழலோ வேறு மாதிரியாக இருந்திருக்கிறது. இதனால் கடுப்பான ஸ்டாலின், கடுகடு எனவே இருந்துள்ளார்.
இதற்கிடையே, வியாபாரி ஒருவர் ஸ்டாலினுக்கு இளநீர் வெட்டி ஸ்டிரா இல்லாமல் கொண்டுவர, ஸ்டாலின் அதை வாங்க யோசித்தார். இதனை புரிந்தகொண்ட வியாபாரி, இளநீரை டம்ளரில் ஊற்றிக் கொடுத்தார். அதேபோல், ஆரத்தி தட்டினால் எந்தக் கோளாறும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, ஆரத்தி எடுத்த பெண்களை ஸ்டாலினின் அருகிலேயே விடாமல் வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி தடுத்துள்ளார்.
இந்த களேபரங்களுக்கு இடையே இளைஞர்களின் செல்ஃபிக்கு சளைக்காமல் போஸ் கொடுத்த ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளை ரசிக்கவில்லை. எ.வ.வேலுவை அருகில் அழைத்து, “கூட்டத்தைக் கூட்ட வேண்டாம்னு தானய்யா சொன்னேன்?” என கடிந்துவிட்டு, கூடியிருந்த மக்கள் முன் பரப்புரை வாகனம் இருந்தும் பேசாமல் புறப்பட்டுச் சென்றார் ஸ்டாலின். இதனால் ஏமாற்றமடைந்த மக்களும், அதிருப்தியுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.