கோயம்புத்தூர் மாவட்டம் ராஜவீதியில் திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று (டிசம்பர் 16) நடைபெற்றது. அதில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பேசினர். முதலில் பேசிய செந்தில்பாலாஜி, ”கோவை திமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் விதமாக உள்ளாட்சி தேர்தலில் 96 விழுக்காடு வாக்குகளை பெற்றோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெறுவோம். உண்ணாவிரத போராட்டத்தில் லஞ்ச் பிரேக், டீ பிரேக் விட்டவர்கள் அதிமுகவினர்.
முதலமைச்சர்களுக்கு எல்லாம் முதலமைச்சராக நமது முதலமைச்சர் இருக்கின்றார். அன்னூர் பகுதியில் விவசாய நிலங்களை கட்டாயப்படுத்தி அரசு எடுக்காது. நிதிகளை கொடுத்து விருப்பபடுவர்களின் நிலங்களை மட்டுமே எடுப்போம். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போராட்டம் நடத்துபவர்களை பற்றி கவலை இல்லை எனத் தெரிவித்தார்.
இவரை தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு, நான் பேச நினைத்தது எல்லாம் எனக்கு முன் பெரியவர்கள் பேசிவிட்டனர். செந்தில்பாலாஜி மிக மிக சிறப்பாக இந்த பகுதியை கட்டி ஆளுகின்றார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, சிறு குறை கூட சொல்ல முடியாத அளவுக்கு இருந்தவர் பேராசிரியர் அன்பழகன். சமூக நீதி கண்ணாடியை போட்டு பார்த்தவர் அவர்.
ஸ்டாலினிடம் தலைவர் பதவியை கொடுக்க வேண்டும் என்று சொன்னவர் அன்பழகன். அதன்பின் செயல் தலைவராக ஸ்டாலின் கொண்டு வரப்பட்டார். தேர்தல்களில் திமுக வெற்றிக்காக பாடுபட்டவர் உதயநிதி. அவருக்கு ஒன்றரை வருடம் குறைவாக அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதை அவர் பொறுத்து கொள்வார்.
காரல்மார்க்ஸ், லெனின் மற்றும் அம்பேத்கர் ஆகியோருக்கு ஏற்பட்ட நெருக்கடி தந்தை பெரியாருக்கு இல்லை. பெரியார் எந்த நிர்பந்தமும் இல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்கள், அனைத்து தரப்பு மக்களுக்காக உழைத்தவர். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று திமுகவிடம் மட்டும் உடனே எதிர்பார்க்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள் முதலில் சென்று வாக்களிக்க வேண்டும். பெண்களுக்கு எது கிடைக்க வேண்டுமோ, அது சரியான நேரத்தில் வந்து சேரும் எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க: 10 சதவீதம் வாரிசு அரசியல் சகஜம் தான் - அமைச்சர் பொன்முடி பளீச்!