பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை மட்டுமல்லாமல் பல விவசாயிகள் பருவ காலங்களில் தக்காளி பயிரிடப்படுவது வழக்கம். பொள்ளாச்சியை அடுத்த நல்லிகவுண்டன் பாளையம், தாளக்கரை, தேவம்பாடிவலசு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளியை பயிரிடுகின்றனர்.
ஆணி, புரட்டாசி, ஐப்பசி உள்ளிட்ட பருவ காலத்தின்போது விளைச்சல் அதிகரிப்பதால் சில நேரங்களில் 15 கிலோ எடை கொண்ட தக்காளி வெறும் 70 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது. இதனால் ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.
ஒரு பெட்டி தக்காளி ரூ.200 முதல் 250 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே குறைந்தளவு லாபம் ஈட்ட முடியும். எனவே விலை குறையும் நேரங்களில் வீணாகும் தக்காளிகளை சாலையில் கொட்ட மனம் இல்லாமல் அந்த வீணான தக்காளிகள் விளை நிலங்களுக்கு உரமாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, வீணாகும் தக்காளியை அந்த தொழிற்சாலையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்ய நிரந்தர சாஸ் உற்பத்தி தொழிற்சாலை அமைத்துத் தருமாறு பொள்ளாச்சி விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.