கோவை: கடந்தாண்டு கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணிக்கு பட்டதாரி இளைஞர்கள் உள்பட பலரும் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களில் பலரும் தூய்மைப் பணிக்குச் செல்லாமல் அலுவலகப் பணியினை மேற்கொண்டுவருவதாகப் புகார்கள் எழுந்தன.
அதுமட்டுமின்றி பட்டியலின சமூகத்தினர் மட்டும் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்படுவதாகும் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், தூய்மைப் பணிக்கு நியமன ஆணையைப் பெற்றுக்கொண்டு தூய்மைப் பணி செய்யாமல் அலுவலகப் பணியினை மேற்கொண்டுவருபவர்களைத் தூய்மைப் பணிக்கு அனுப்ப வலியுறுத்தி இரண்டு நாள்களுக்கு முன் சமூக நீதி கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம் கோவை ஒன்றிய மண்டல உதவி ஆணையாளரிடம் வெற்றிலை பாக்கு இனிப்புகளுடன்கூடிய தாம்பலத் தட்டுடன் சென்று மனு அளித்தார்.
மாநகராட்சி ஆணையர் உத்தரவு
தூய்மைப் பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டு வேறு பணிகளுக்குச் சென்றவர்களை உடனடியாகத் தூய்மைப் பணிக்கே திரும்ப மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இரண்டு நாள்களில் பணிக்குத் திரும்பியதை உறுதிசெய்யவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி ஆணையரின் இந்த உத்தரவு தூய்மைப் பணியாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: கூடலூரில் தொடர் மழை: மக்கள் அவதி