இந்தியாவில் கேரள மாநிலத்தில் முதல் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டாலும், தற்போது அம்மாநிலத்தில் பாதிப்புகள் குறைந்துள்ளன. அதேசமயம் தமிழ்நாட்டில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதனிடையே, தமிழ்நாட்டில் தற்போது கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் உள்ளதால், நோய் பரவாமல் இருக்க, கேரளா தனது எல்லைகளை மூடி இருப்பதாகக் கூறி, சிலப் புகைப்படங்களை இணைத்து தகவல் வெளியிட்டு வருவது வதந்தி எனவும், எந்தக் காரணம் கொண்டும் தமிழ்நாடு மட்டுமல்ல எந்த மாநிலத்தின் எல்லையையும் கேரளா மூடாது எனவும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் காட்டு வழியாக நடந்து, தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இடுக்கி மாவட்டம் சாந்தன்பாறை காவல் துறையினர் தமிழில் எச்சரிக்கை விடுக்கும் ஒரு வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், "தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்திற்குள் காட்டு வழியாக வர அனுமதி கிடையாது. அதனை மீறி வருபவர்கள் 28 நாள்கள் சிறை வைக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் காட்டு வழியாக வருபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்" எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:துரத்தி வந்த ட்ரோன்! தெறித்து ஓடிய இளைஞர்கள்!