தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதன்படி, இன்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் மூன்றாயிரத்து 756 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 350ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கோவை மரக்கடை அருகே உள்ள மில் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் எலக்ட்ரானிக் கடையில் பணியாற்றி வந்த ஊழியருக்கு கரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு வேலை செய்தவர்களுக்கும் கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முடிவில் 10 ஊழியர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து 10 பேரும் கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின் எலக்ட்ரானிக் கடை அடைக்கப்பட்டு, அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து, அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.