கோவை: தமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று (பிப்.19) மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற அவர் வழிபாடு நடத்தினார். அங்கு குடியரசுத் தலைவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கோவை புறப்பட்ட அவர், ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்று உரையாற்றினார். பின்னர் கோவை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று காலை கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள முப்படை பயிற்சி கல்லூரிக்கு செல்வதாகவும், அங்கு நடைபெறும் கலந்துரையாடலில் அவர் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நீலகிரியில் மோசமான வானிலை நிலவியதால், குடியரசுத் தலைவரின் பயணம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து பிற்பகல் 12.15 மணிக்கு, கோவை விமான நிலையம் புறப்பட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்திய விமானப்படை விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்.
இதையும் படிங்க: "திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் பிப்.21ஆம் தேதி உண்ணாவிரதம்" - அண்ணாமலை