கோவை: பி.என்.பாளையம் பகுதியில் ராமு என்பவர் ஸ்டேஷனரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அந்தக் கடைக்கு ஜெராக்ஸ் எடுக்க சென்றுள்ளார். அப்போது ராமு அவரது செல்போனில் ஏதோ ஒரு காணொளியைப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் போனை அணைக்காமல் மேசையின் மேல் வைத்துள்ளார்.
அந்த செல்போனில் ஜெராக்ஸ் எடுக்க வந்த மாணவருக்குத் தெரிந்த மாணவியின் வீடியோ இருந்துள்ளது. இதைப் பார்த்த அம்மாணவர் உடனடியாக ராமுவிடம் வீடியோ குறித்து கேள்வி எழுப்பி செல்போனை பிடுங்கி பார்த்துள்ளார். அப்போது அந்த செல்போனில் பல்வேறு கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களின் வீடியோக்கள், புகைப்படங்கள் இருந்துள்ளது.
இதனை அடுத்து ராமு அந்த மாணவரிடமிருந்து செல்போனை பிடுங்கிக் சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார். பின்னர் அம்மாணவர் ராமு மீது அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொள்ளத் துவங்கினர். போலீசார் நடத்திய விசாரணையில் ராமுவிற்கு திருமணம் ஆகி அவரது மனைவி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு குழந்தை இருப்பதும், ராமு அவரது கடைக்கு வரும் அல்லது கடைக்கு வெளியில் நின்று கொண்டிருக்கும் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை அவர்களுக்குத் தெரியாமலேயே போட்டோ மற்றும் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து தற்போது இது குறித்து காவல்துறையினர் ராமுவிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயம் ஸ்டேஷனரி கடை உரிமையாளர் ராமு ஜெராக்ஸ் எடுக்க வந்த மாணவர் தாக்கிவிட்டதாகவும், இதனால் தனக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் அம்மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: ஏலச்சீட்டு நடத்தி ரூ. 96 லட்சம் மோசடி - தம்பதி கைது!