கோயம்புத்தூர் காந்திபுரம் 100 அடி வீதியில் டைகர் எண்டர்பிரைஸ் என்ற டெலி காலர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை மணிகண்டன் என்பவர் நடத்தி வருகிறார். ஒவ்வொரு கடைசி ஞாயிறு அன்றும் இந்த நிறுவனதின் சார்பில் ஊழியர்களுக்கு அசைவ உணவு வழங்கப்படுவது வழக்கம் எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில், நேற்று (நவ. 26) இந்த நிறுவனம் இயங்கிய நிலையில், கார்த்திகை தீபம் என்பதால் அசைவ உணவிற்கு பதிலாக, காந்திபுரம் பாரதியார் சாலையில் உள்ள பிரபல சப்ளை செயின் ஹோட்டலில் இருந்து சைவ உணவு வாங்கலாம் என முடிவெடுத்து, அங்கு பணிபுரியும் பெண்களுக்காக 9 சாப்பாடுகள், 2 ஆயிரத்து 157 ரூபாய்க்கு வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பணிபுரிந்த பெண்கள் பிற்பகல் உணவைப் பிரித்து உண்ணும் போது, கீரையில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறப்படும் நிலையில், அதை கண்டு அதிச்சி அடைந்து உள்ளனர். மேலும், உணவு சாப்பிட்ட சில பெண்கள் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, உடனடியாக இதுபற்றி உரிமையாளரிடம் புகார் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து சம்மத்தப்பட்ட உணவகத்தில் புகார் அளிப்பதற்காக அடையார் ஆனந்த பவன் உணவகத்திற்கு சென்ற நிறுவன உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், சாப்பாட்டில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறியுள்ளனர். அதற்கு இனிமேல் இது போன்ற சம்பவம் நிகழாது என்று உணவக தரப்பில் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ள மணிகண்டன் முயற்சித்து உள்ளார். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், நேற்று (நவ. 26) அளிக்கப்பட்ட புகாருக்கு இன்று (நவ. 27) புகார் பதிவு செய்யப்பட்டதாக உணவு பாதுகாப்பு துறையில் இருந்து குறுந்தகவல் வந்திருப்பதாக மணிகண்டன் தெரிவித்து உள்ளார்.
மேலும், உணவை சாப்பிட்ட பெண்கள் கரப்பான் பூச்சி இருப்பது தெரிய வந்ததும் வாந்தி எடுத்ததாகவும், பிரபலமான ஹோட்டலில் புகாருக்கு அலட்சியமாக பதில் அளித்தது வருத்தப்படும் படியாக இருப்பதாகவும் மணிகண்டன் வேதனை தெரிவித்துள்ளார். இதனிடையே, இது தொடர்பாக காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் உணவக நிர்வாகத்தை கேட்ட பொழுது, இதுகுறித்து ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும், இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்து கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: போலி சான்றிதழ் மூலம் விசா எடுக்க முயற்சி முதல்.. பாஜக - திமுக நிர்வாகிகள் மோதல் வரை சென்னை குற்றச் செய்திகள்!