கோயம்புத்தூர்: ராமகிருஷ்ணா தனியார் மருத்துவமனையில் இந்தியாவிலே முதன்முறையாகப் புற்றுநோய் விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய டிஜிட்டல் இன்போகிராபிக் இணைய வழி புத்தகத்தை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ராமகிருஷ்ணா, புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் பி.குகன் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், "புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருப்பது ஒரு புறம் இருந்தாலும் அதனை கட்டுப்படுத்துவது என்பது சவாலான ஒன்றாகவே உள்ளது. புகையிலை எந்த வடிவிலிருந்தாலும் ஆபத்துதான்.
இதுவரை கோவை மாநகரில் சுமார் 2 ஆயிரம் கிலோ வரையிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 275 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் திரையரங்குகளில் ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு என்பது மக்கள் மனதில் அதிகம் பதிகிறது. ஆனால் புகையிலை பிடிப்பவர்கள் மத்தியில் தாக்கதை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
தற்போது பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகளவில் புகையிலை புழக்கம் உள்ளது என்பது வேதனைக்குரியது. இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விட பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த விழிப்புணர்வு ஒரு ஓவியமாக அல்லது கார்ட்டூனாக கொண்டு வந்தால், அது விரைவில் பள்ளி மாணவர்களை சென்றடையும்.
மேலும் ஒருவர் குடிப்பதை பார்க்கும் போது தான் மற்றவர்களுக்கு அதனை பயன்படுத்த வேண்டுமென்ற ஆர்வம் தூண்டப்படுகிறது. ஆகையால் மாநகர பகுதிகளில் புகையிலை விற்கும் 170 கடைகள் மூடப்பட்டுள்ளது. புதிதாக துவக்கபட்ட சுந்தராபுரம் காவல் நிலையத்தில் சுமார் 400 கிலோ புகையிலை பிடிக்கபட்டது. அதாவது அது கூல்லிப் எனப்படும் போதைப் பொருள் ஆகும். இது குறிப்பாக பள்ளி மாணவர்களைக் குறிவைத்து விற்கப்படுகிறது. இது கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது எனத் தகவல் கிடைத்துள்ளது.
குறிப்பாக வட மாநிலங்களில் அதிகளவில் புகையிலை பயன்பாட்டில் உள்ளது. அதற்கு காரணம் தமிழ்நாட்டில் அதிகளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் புகையிலையை அதிகம் பயன்படுத்துகின்றனர். புகையிலை விற்கும் ஒரு கடையை மூடினால், வேறோரு பகுதியில் மீண்டும் ஒரு கடை துவக்கப்படுகிறது. அதற்குக் காரணம் அதிகளவில் முதலீடும், அதிகளவு லாபமும் தான்.
தமிழ்நாடு அரசு புகையிலை பொருட்களுக்காக பல்வேறு விழிப்புணர்வுகளும் செய்து வருகிறது. வட மாநில தொழிலாளர்கள் அதிகளவு புகையிலேயே பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கும் விழிப்புணர்வு மிக முக்கியம்" என மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து சிகரெட் பாக்கெட் திருட்டு.. வெளியான சிசிடிவி