கோயம்புத்தூர் மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக 24 மணி நேரமும் பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி காவல் ஆய்வாளர் திலக் (மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை) குழுவினர் பெரிய தடாகம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நான்கு இளைஞர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் பதற்றத்துடனும் முன்னுக்குப் பின் முரணாகவும் பதில் அளித்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த காவலர்கள் தொடர் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இளைஞர்கள் நான்கு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நால்வரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் யோகேஷ்(20) ரூபன்(19) தேன் தமிழ்செல்வன்(19) ஹபீஸ் சபீர்(19) என்பது தெரிய வந்தது.
பள்ளி பருவ நண்பர்களான இவர்கள் நால்வரும் பணத்திற்கு ஆசைப்பட்டு ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்ய முயன்றது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. இவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் கத்திமுனையில் ரூ.5 லட்சம் கொள்ளை.. காவல்துறை சிசிடிவி வேலை செய்யாததால் சிக்கல்!