கோயம்புத்தூர்: சுந்தராபுரம் பகுதி காந்தி நகரைச் சேர்ந்தவர் தயானந்த். இவர் ஒன்றிய அரசால் வழங்கப்படும் ஐசிடி விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப செயல்பாட்டிற்கு ஆசிரியர்களுக்காக ஐசிடி (Information and Communication Technology) விருது வழங்கப்படுகிறது. 2018, 2019 ஆம் ஆண்டு வழங்கப்படும் விருதுக்கு தமிழ்நாட்டில் ஆறு பேர் தேர்வாகியுள்ளனர்.
அதில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியரான கோவையைச் சேர்ந்த தயானந்த் ஒருவர். இவருக்கு 2018ஆம் ஆண்டிற்கான விருது வழங்கப்படவுள்ளது.
அனிமேஷன் முறையில் பாடங்கள்:
இவர் 2D, 3D அனிமேஷன் முறையில் பாடங்களை நடத்திவருகிறார். 2012ஆம் ஆண்டு ஆசிரியர் வாழ்க்கையை தொடங்கிய இவர் 2017ஆம் ஆண்டிலிருந்து உடுமலைப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றுகிறார்.
கடந்த 2018ஆம் ஆண்டு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது தொடக்கப் பள்ளி (primary school team) புத்தக வடிவமைப்புக் குழுவில் இருந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கியூ ஆர் ஸ்கேன் குழுவில் (QR scan team) பணியாற்ற தொடங்கினார். 40 பேர் உள்ள குழுவில் தனிப்பட்ட நபராக 170க்கும் மேற்பட்ட அனிமேஷன் கதைகளை வடிவமைத்துள்ளார்.
இவர்கள் வடிவமைக்கும் இந்த வீடியோக்களை diksha.gov.in என்ற ஒன்றிய அரசின் அங்கீகாரம் பெற்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அனைத்து மாநிலங்களும் பங்குபெறும் இந்த தளத்தில் அதிகப்படியான வீடியோக்களை பதிவு செய்ததற்காக ஒன்றிய அரசு இவருக்கு இந்த விருதை அறிவித்துள்ளது.
அனிமேஷன் கதைகள்:
இது குறித்து தயானந்த் கூறுகையில், “2018ஆம் ஆண்டு புதிய பாடம் அமல்படுத்தப்பட்டபோது புதிய பாட நூல் உருவாக்க ஆங்கில புத்தக வடிவமைப்பு குழுவில் பணியாற்றினேன். அதனைத் தொடர்ந்து QR code என்பதை உருவாக்கினோம். முதலில் ஆங்கில இலக்கணங்களை அனிமேஷன் வீடியோவாக உருவாக்கி அதனை QR ல் வரும்படி செய்தோம்.
இதற்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடந்து தொடக்கப்பள்ளி பாடங்களுக்கு முழுக்க முழுக்க அனிமேஷன் கதைகள் போன்றும், உயர்கல்வி பாடங்களுக்கு தேர்வு சம்பந்தப்பட்ட வீடியோக்களை உருவாக்கி வருகிறோம்.
பல மொழிகள் கற்றுக்கொள்ளலாம்:
தனிப்பட்ட நபராக 170க்கும் மேற்பட்ட வீடியோக்களை உருவாக்கியதற்காக ஒன்றிய அரசு ஐசிடி விருதை அறிவித்துள்ளது. இந்த விருதை அறிவித்ததற்காக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கும், தேசிய பள்ளிக் கல்வி இயக்கத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படும்போது இது போன்ற அனிமேஷன் பாடங்கள் உதவியாய் இருக்கும்.
இதனை கல்வி தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பினால் இணைய வசதி இல்லாத மாணவர்கள் அதனை உபயோகப்படுத்திக்கொள்ள முடியும். தற்போதுள்ள கரோனா தொற்று சூழலில் மிகவும் உதவிகரமாய் இருக்கும்.
மேலும் ஒரு புதிய முயற்சியாக தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களை இணையவழியில் வெளி நாடுகளில் உள்ள மாணவர்களுடன் உரையாடல் செய்கிறோம். இதன் மூலம் மாணவர்கள் எளிதில் பல மொழிகள் கற்றுக்கொள்ள இயலும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமரின், உயிர் காக்கும் விருது - மகிழ்ச்சியில் முதல்நிலை காவலர்