கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கோவை மாவட்டத்தில் 33 சோதனைச் சாவடிகள் அமைத்து 1500 காவல் துறையினர் சுழற்சி முறையில் இரவும், பகலும் பணியாற்றி வருகிறார்கள்.
இதேபோல் கரோனா தடுப்புப் பணிகளில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், ஊரடங்கு காரணமாக இவர்களுக்கு தேநீர்கூட கிடைக்காத நிலை உள்ளது.
இந்நிலையில் கோவையில் ”சாய் கப் சாய்” எனும் தனியார் நிறுவனம் ஒன்று, அட்டைப் பெட்டி போன்ற குடுவையில் தேநீர் வழங்கிவருகிறது.
3 மணிநேரம் சூடாக இருக்கும் தேநீர்
முழுக்க முழுக்க அட்டைப் பெட்டியால் வடிவமைக்கப்பட்ட இந்தத் தேநீர் குடுவையின் உள்ளே அலுமினிய சீல்டு பேக்கிங் உள்ளது. இதனால் இதன் உள்ளே ஊற்றப்படுகின்ற தேநீர், சுமார் மூன்று மணி நேரம்வரை சூடு ஆறாமல் அப்படியே இருக்கும்.
விதவிதமான தேநீர்கள்
300மிலி, 500 மிலி, 1000 மிலி, போன்ற அளவுகளில் இஞ்சி டீ, மசாலா டீ, தேன் டீ, ஏலக்காய் டீ என விதவிதமாக தேநீர் வகைகளை இந்த பிளாஸ்கில் அடைத்து, காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கும், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர், சாலையில் பணியாற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள் என பலருக்கும் சூடான, சுவையான தேநீரை இந்நிறுவனம் வழங்கிவருகிறது.
கரோனா தடுப்பு பணிச்சுமை காலங்களில் உள்ள பணியாளர்களுக்கு இதுபோன்ற முறையில் சூடாக தேநீர் கிடைப்பது மிகப்பெரிய உதவிக்கரமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: தேநீர் கடைகளை மூடி பொருள்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்