கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி நீதிமன்ற வளாகம் அருகில் கோகுல் என்ற இளைஞர், 5 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். அப்போது அந்த கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களைக் கொண்டு கோகுலை கொலை செய்தனர். அதேநேரம் அதனை தடுக்கச் சென்ற கோகுலின் நண்பர் மனோஜ் என்ற இளைஞரையும், அந்த கும்பல் தாக்கியது.
இதில் படுகாயம் அடைந்த மனோஜ், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் தற்போது வரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களில் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் அதற்கு முன்தினம் (பிப்.12) கணபதி பகுதியில், கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சத்தியபாண்டி என்பவர் பிணையில் வெளியே வந்தார்.
அப்போது அவரை நோட்டமிட்ட ஒரு கும்பல், சத்தியபாண்டியை விரட்டி விரட்டி வெட்டியது. மேலும் அவர் மீது துப்பாக்கியால் சுட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் அரக்கோணம் நீதிமன்றத்தில் தாங்களாகவே முன்வந்து ஆஜராகி உள்ளனர். இவ்வாறு கோவை மாவட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் ஆயுதங்களைக் கொண்டு கொலை செய்யும் சம்பவம் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பிரபல சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு ரீல்ஸ் செய்து, அதனை வீடியோவக பதிவேற்றம் செய்யும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் குறித்தும், அவர்களின் பின்னணி குறித்தும் கோவை மாநகர காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதன்படி, இவ்வாறு வீடியோ பதிவேற்றம் செய்யும் நபர்களில் யாருக்கேனும் குற்ற பின்னணி இருந்தால், அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்கனவே கோவை மாநகர காவல் துறை சார்பில் இது போன்று வீடியோ பதிவுகளை தவிர்க்குமாறு அறிவுறித்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவை நீதிமன்ற வளாக கொலை வழக்கு: 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!