ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை தொடர்பாக கோவை மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை ஆணைப்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும் மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் மீன்வளத் துறை அலுவலர்கள் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மீன்வளத் துறை இணைந்து பொள்ளாச்சி நகரம் தேர்நிலையம், மார்க்கெட் ரோடு, நியூ ஸ்கீம் ரோடு போன்ற பகுதிகளில் உள்ள 12 மீன் விற்பனை கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் நான்கு கடைகளில் பழைய கெட்டுப்போன 20 கிலோ மீன்கள் கண்டறியப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. ஆய்வில் ரசாயனம் கலந்த மீன்கள் ஏதும் கண்டறியப்படவில்லை.
மேலும் புதிய மீன்கள் மட்டும்தான் விற்பனை செய்ய வேண்டும், மீன் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும், பிளாஸ்டிக் பை பயன்படுத்தக் கூடாது என மீன் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டது.
இன்றைய சோதனையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்புராஜ், செல்வபாண்டியன், வேலுச்சாமி, சிவானந்தம், காளிமுத்து மற்றும் மீன்வளத் துறை மேற்பார்வையாளர் பழனிசாமி ஆகியோர் இருந்தனர்.
இதையும் படிங்க: மெட்ராஸ் ஐஐடியை தேடிவந்த ரோல்ஸ் ராய்ஸ்!