கோவை குற்றால அருவி நுழைவு கட்டண மோசடியில் ஈடுபட்ட போளுவாம்பட்டி வனவர் ராஜேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் வனச்சரகர் சரவணனிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரும் பணியிடை நீக்கம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் நுழைவு கட்டண சீட்டில் 1 கோடி ரூபாய் வரை மோசடி நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் ஆலந்துறை அடுத்த சாடிவயல் போளுவாம்பட்டி வனப்பகுதியில் கோவை குற்றால அருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த அருவிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
குறிப்பாக வார விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வருவர். இந்த அருவி போளுவாம்பட்டி வனச்சரகத்தில் அமைந்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.60, குழந்தைகளுக்கு ரூ.30, இருசக்கர வாகனம் நிறுத்த ரூ.20, கார்கள் நிறுத்த ரூ.50 விதிக்கப்படுகிறது.
இந்த கட்டண வசூலில் லட்ச கணக்கில் முறைகேடுகள் நடப்பதாகவும், போலியான நுழைவு சீட்டை சுற்றுலா பயணிகளுக்கு கொடுத்துவிட்டு அதன் மூலம் வரும் பணத்தை அதிகாரிகளே எடுத்துக்கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஈடிவி பாரத் கள ஆய்வு நடத்தி செய்தி வெளியிட்டது.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமாரிடம் கேட்டபோது, ’இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் ஈடிவி பாரத் செய்தி எதிரொலியாக நுழைவு கட்டண மோசடியில் ஈடுபட்ட போளுவாம்பட்டி வனவர் ராஜேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு சாக்லேட்டுக்குள் கஞ்சா.. பீடா கடையில் நூதனம்..